• Thu. Mar 28th, 2024

குஜராத் தொங்கு பால விபத்து..
ராகுல் காந்தி இரங்கல்!

குஜராத் மோர்பி தொங்கு பால விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த விபத்தை அரசியலாக்கினால், பலியானவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் தொடங்கிய நடைபயணம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவை தொடர்ந்து கடந்த 23ம் தேதி முதல் தெலங்கானா தொடர்ந்து வருகிறது.
இந்த ஒற்றுமை நடைபயணத்தின் போது அந்தந்த மாநிலங்களின் அரசியல் சூழ்நிலைகளையும், தேசிய அளவிலான பிரச்சினைகளை பற்றி செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் குஜராத் தொங்கும் பாலம் விபத்துக்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பப்பட்டது.
குஜராத் தொங்கும் பால விபத்து குறித்து ராகுல் காந்தி கூறுகையில், குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அங்கு ஏராளமான அப்பாவி பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நேரத்தில் இதில் அரசியல் பேசுவது நல்லதல்ல. இந்த விபத்தை அரசியலாக்கினால், பலியானவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, நாட்டில் பல்வேறு அமைப்புகள் மீது முறையான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீதித் துறை, அதிகாரத்துவம் மற்றும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்த அமைப்புகள், ஆர்எஸ்எஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்படுவதையும், இந்த அமைப்புகளில் சுதந்திரம் பேணப்படுவதையும் உறுதி செய்வோம். எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி.
நாங்கள் சர்வாதிகாரத்தை நடத்தவில்லை என்பது எங்கள் டிஎன்ஏவில் உள்ளது. சமீபத்தில், எங்கள் கட்சியின் தலைவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் பிற அரசியல் கட்சிகள் எப்போது தேர்தல் நடத்தும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 100 ஆண்டுகள் பழமையான பாலத்தின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 26ம் தேதி பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. நேற்றிரவு அந்தப் பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து பாலத்தில் நின்றிருந்த 400 பேர் ஆற்றில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை 140க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கபட்டு உள்ளது. இந்த விபத்திற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *