• Thu. May 2nd, 2024

அண்ணாமலை போலவே ஆளுநர் பேசுகிறார்
கேஎஸ் அழகிரி பேட்டி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலவே ஆளுநர் செயல்படுவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசை குற்றம் சாட்டி வரும் நிலையில், 40 கிலோ மீட்டர் இந்திய எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 40 பேர் இறந்தனர். இதற்காக மோடி துணை போய்விட்டார் எனச் சொல்ல முடியுமா? என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் கார் சிலிண்டர் தீடீரென வெடித்து விபத்துக்குள்ளான நிலையில், அந்த விபத்தில் கோவையைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் பலியானார். அவரது வீட்டில் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க தமிழக முதல்வர் பரிந்துரை செய்துள்ள நிலையில், தமிழக அரசு மீது, காவல்துறை மீதும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,Òஅண்ணாமலை தமிழக காவல்துறை மீதும் அரசின் மீதும் குற்றம் சுமத்துவது அபத்தமானது. தமிழக அரசினைப் பொறுத்தவரை எந்தத் தீவிரவாத அமைப்பிற்கும் ஆதரவளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் பொய்யான குற்றச்சாட்டை எழுப்புகிறார்கள்.
வெடிகுண்டு விபத்து தமிழக அரசால் மூடிமறைக்கப்பட்டது போலவும் காவல்துறை அதில் மெத்தனமாக இருந்தது போலவும் அண்ணாமலை முதல் ஆளுநர் வரை பேசுகின்றனர். இயக்கத்திற்கு அனுதாபிகள் இருக்கத்தான் செய்வார்கள். விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாளர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரையும் கைது செய்துவிடவில்லை. அவர்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அனுமதிக்கப்பட்டார்கள்.
அது போல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு யார் அனுதாபிகளாக இருந்தார்கள் என்பது தேசிய புலனாய்வு முகமைக்குத்தான் தெரியும். அவர்கள் அதைத் தெளிவுபடுத்திச் சொன்னால் மாநில அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம். தேவை இல்லாமல் ஒரு அரசைக் குறை சொல்லுவது தவறு. ஆளுநர் குற்றச்சாட்டைச் சொல்வது தவறு.
அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரதிநிதி அவர். முக்கிய ஆதாரங்கள் அளிக்கப்பட்டது என ஆளுநர் அண்ணாமலையைப் போலவே பேசுகிறார். 40 கிலோ மீட்டர் இந்திய எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 40 பேர் இறந்தனர். இதற்காக மோடி துணை போய்விட்டார் எனச் சொல்ல முடியுமா? ஆனால் நான் அவ்வாறு சொல்ல விரும்பவில்லை” என கேஎஸ் அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் தமிழக காவல்துறையை கேள்வி எழுப்பும் வகையில் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையை படிக்கும்போது அண்ணாமலை அவர்கள் தமிழக பா.ஜ.க. தலைவரா? இல்லை மத்திய பா.ஜ.க. அரசால் அனுப்பப்பட்டுள்ள ஸ்லீப்பர் செல்-ஆ என்கிற சந்தேகம் வருகிறது. இத்தகைய ரகசிய அரசு ஆவணங்கள் எப்படி அவருக்கு கிடைத்தது என வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் கேஎஸ் அழகிரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *