• Fri. Mar 29th, 2024

மே தினத்தில் கிராம சபைக் கூட்டம்..,தமிழ்நாடு அரசு உத்தரவு..!

Byவிஷா

Apr 25, 2023
TN Government

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் தினம் (1, மே), சுதந்திர தினம், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை கொரோனா பாதிப்பு அதிகரித்து இருந்த காரணத்தால் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதனையடுத்து தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதன் காரணமாக கடந்த ஆண்டு சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டத்தை கூட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து தற்போது தொழிலாளர் தினத்தையொட்டி மே 1 ஆம் தேதி கிராம சபைக்கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தொழிலாளர் தினமான, மே, 1ல், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையை பின்பற்றி, மே, 1 ஆம் தேதி காலை, 11:00 மணிக்கு கூட்டத்தை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தை, மத சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது என்றும், கிராம சபை கூட்டம் நடக்கும் இடத்தை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த கிராமசபைக்கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, காய்ச்சல் விழிப்புணர்வு, குடிநீர் சேமித்தல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்தும் கிராம சபைக் கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவைகளை ஆலோசித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *