• Sat. Apr 20th, 2024

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு 30சதவீதம் ஊதிய உயர்வு வழங்கும் தமிழக அரசு..!

தமிழ்நாட்டில் அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. அவர்களுக்கு 30 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது. மருத்துவ துறையில் ஒப்பந்த பணியாளர்களாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணிசெய்து வருவோர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா என்னும் கொடிய தொற்றால் தமிழக மக்கள் தடுமாற்றத்துடன் இருந்து வந்த நிலையில், தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் பார்க்காமல் உழைத்தவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள். அவர்களின் சேவையை பாராட்டும் விதமாகத்தான், கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில், பொதுமக்கள் அவரவர்களின் வீடுகளில் மணிகளை ஒலித்து தங்களது நன்றியை தெரிவிக்கவும், மருத்துவ பணியாளர்களை ஊக்குவிக்கவும் கூறியிருந்தார். அதுபோல மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாராட்டத்தக்க சேவைகளின் மூலம் உயிர்குடிக்கும் கொரோனாவை நேருக்கு நேராக சந்தித்து, லட்சக்கணக்கான மக்களை பாதூத்துள்ளனர்.
கொரோனா என்னும் கொடிய நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு மருந்து மாத்திரை எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தொற்றினால், தனிமைப் படுத்திக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலையில், மக்களைப் பாதுகாக்கும் ஒரு கவசமாக, காவல்வீரனாகத் திகழ்ந்தது மருத்துவத் துறை மட்டுமே. கோடையில் பருத்தி ஆடை அணிய அறிவுறுத்தும் மருத்துவர்கள், பி.பி.இ கிட் வகை பாலித்தீன் ஆடையை அணிந்து, பணி முடியும் வரை இயற்கை உபாதைகளுக்கும், உணவருந்தவும், தாகத்துக்கு தண்ணீர் குடிக்கவும் முடியாமல் மிரட்டும் சவாலுடன் பணி செய்தனர். இரவு பகல் பாராது, குடும்பத்தினரை பிரிந்து பல நாட்களாக, காற்று புகாத உடைகளை அணிந்துகொண்டு, வாரக்கணக்கில் மருத்துவமனையே உலகமாக கருதி, களத்தில் நின்று பம்பரமாக பணியாற்றியவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம்.
கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டக் களத்தில், காவல்வீரனாய் நின்று மனித கூட்டத்தைக் காத்தருளிய நிஜ ஹீரோக்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் முன்தேதியிட்டு வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு அரசுப்பணியில் இருப்பவர்கள் மட்டுமின்றி ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு குறைந்த பட்சம் 30 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ ஆணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்ற மே மாதம் முதல் அமலுக்கு வரும் வகையில் அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
இன்று 2021 – 22ம் ஆண்டிற்கான பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேசிய நலவாழ்வு குழும ஒப்பந்த ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றும், மருத்துவ துறையில் ஒப்பந்த பணியாளர்களாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணிசெய்து வருவோர்களுக்கு ஊதிய உயர்வாக 28,100 பேருக்கு ஆணை வழங்கியதால் 89கோடி ரூபாய் அரசிற்குதீர்வுகளின் ஆண்டிற்கு கூடுதல் செலவாகிறது., மக்களை தேடி மருத்துவம், தடுப்பூசி செலுத்தும் பணி உள்ளிட்ட அனைத்திலும் இந்த பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள் என்று குறிப்பிட்டார். மருத்துவ பணியாளர்களுக்கு இனிப்பான செய்தியை அளித்திருக்கிறார் அமைச்சர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *