

அங்கன்வாடி, சத்துணவு திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் இனசுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அதில் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத் துறையால் வெளியிடப்படும் இடஒதுக்கீட்டு ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என ஏற்கனவே ஆணையிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் பெண்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.அதேபோல புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் கீழ் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் போன்ற பணியிடங்களில் 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
