

கடன் தராததால் வங்கி மீது வெறுப்படைந்து, 13 கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளையடித்து கிணற்றில் பதுக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம், தாவணகெரே நியமதி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் இருந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 17.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடன் தராததால் வங்கி மீது வெறுப்படைந்து கொள்ளையடித்ததாக கொள்ளையர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த ருசிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூருகையில்,
பெங்களூரு தாவணகெரேயில் தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்களான விஜய் குமார், அஜய் குமார் வசித்து வந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு விஜய்குமார் வங்கியில் தனது தொழில் அபிவிருத்திக்காக 15 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்தார். ஆனால், கடன் மதிப்பீடு (கிரெடிட் ஸ்கோர்) குறைவாக இருந்ததால் அவருக்கு கடன் கிடைக்கவில்லை. அதன் பிறகு மற்றொரு உறவினரின் பெயரில் கடன் கேட்டு விண்ணப்பித்த போதும், அது நிராகரிக்கப்பட்டது. இதனால் வங்கியின் மீது ஏற்பட்ட விரோதத்தால் வங்கியை கொள்ளையடிக்க விஜயகுமார் சகோதரர்கள் முடிவு செய்தனர். இதற்காக வங்கி கொள்ளை தொடர்பான திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து 6 மாதங்களில் இவர்கள் திட்டம் தீட்டினர். கொள்ளைச் சம்பவம் குறித்து எந்த தகவலும் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் 6 பேர் கொண்ட குழுவை உருவாக்கினர்.
கடந்த அக்டோபர் 26-ம் தேதி இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். கொள்ளைக்காக சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வங்கியை அடைந்தனர். வங்கி லாக்கரில் இருந்த 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 17.7 கிலோ தங்க நகைகள் லாக்கருடன் கொள்ளை அடித்தனர்.
கொள்ளையின்போது அவர்கள் ஒருவரும் செல்போனை பயன்படுத்தவில்லை. உள்ளே சம்பந்தமாக எந்த ஒரு அடைய தீம்பிட்டு செல்லக்கூடாது என்பதற்காக, கொள்ளையடித்துச் செல்லும் போது, வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவற்றின் ஹார்டு டிஸ்குகளையும் திருடிச் சென்றனர்.
பின்னர் ஒரு வருடத்திற்குப் பிறகு இவற்றை எடுத்து விற்கலாம் என்ற எண்ணத்தில் கொள்ளையடித்த தங்கத்தை விஜய்குமாரின் தமிழ்நாட்டிலுள்ள சொந்த வீட்டின் கிணற்றில் லாக்கருடன் பதுக்கி வைத்துவிட்டு, சாதாரண கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் ஐந்து மாத கால தொடர் விசாரணையில், கிடைத்த தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து போலீசார் குற்றவாளிகளை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, லாக்கரில் அடைக்கப்பட்ட நிலையில் தங்கம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது என தெரிவித்தனர். கடன் தராததால் வங்கியை கொள்ளை அடித்த சம்பவம் அனைத்து வங்கியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

