பாரா ஒலிம்பிக் போட்டியில் சற்றுமுன் நடைபெற்ற 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவானி லெகாரா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் கிடைத்த முதல் தங்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வீராங்கனை அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே இந்தியாவின் பவினா பட்டேல் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், நிஷாத் குமார் உயரம் தாண்டுதல் போட்டியிலும் ஆளுக்கொரு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர். இந்தியாவின் வினோத்குமார் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்று உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் வட்டு எறிதல் போட்டியில், 44.38 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். மூன்றாவது நபராக ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தேவேந்திர ஜஜாரியா, 64.35 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தியுள்ளார். இந்திய வீரரான சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இப்படி ஒரே நாளில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4 பதக்கங்களை தட்டித்தூக்கியுள்ளதை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளின் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா, வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் கதுனியா, ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங்குக்கு வாழ்த்துகள்” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.