தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் சின்னச் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத் தொழு வடக்கு மலைப்பகுதியில் சின்னச் சுருளி அருவி உள்ளது. மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மீறி அருவிக்கு செல்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.