கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் வரத்து குறைந்ததால் மீன் விலை இருமடங்கு உயர்ந்தாலும் பலனில்லை என மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு மாதத்திற்கு முன் கடல் பகுதியில் ஏற்பட்ட சூரைக்காற்று மற்றும் கனமழை காரணமாக விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். கடந்த வாரம் விசைப்படகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க சென்ற நிலையில் மீன் வரத்து குறைந்தே காணப்பட்டது.
இந்நிலையில் அதிகளவு மீன்கள் கிடைக்காத நிலையில் குறைந்த அளவிலான “கிளி” மீன் மற்றும் “கணவாய்” மீன்களுடன் கரைக்கு திரும்பினர். இந்த மீன்கள் ஏற்றுமதி ரக மீன்கள் என்பதால் மீன்களை வாங்க ஏற்றுமதி நிறுவனங்கள் இடையே போட்டி நிலவியதால் 40-ரூபாய் வரை விலை போகும் “கிளி” மீன் இருமடங்கு விலையுயர்ந்து 80-ரூபாய்க்கும் 300-ரூபாய் வரை விலை போகும் “கணவாய்” மீன்கள் 400-ரூபாய்க்கு விலை போனது குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைத்த நிலையில் விலை அதிகம் கிடைத்தாலும் நஷ்டம் ஏற்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.