• Wed. Apr 24th, 2024

கேரளாவில் முதன்முதலாக ஏர் ஹோஸ்டஸான பழங்குடியின பெண்;..!

Byவிஷா

Sep 3, 2022

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகா கோவிந்தன் அம்மாநிலத்தின் முதல் பழங்குடியின பெண் ஏர் ஹோஸ்டஸ் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
கோபிகா வானில் பறக்கும் தனது கனவை நனவாக்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.கண்ணூர் மாவட்டம் அலகோட் பஞ்சாயத்து தரப்பன்குன்னு காலனியைச் சேர்ந்த தம்பதி சப்பிலி கோவிந்தன், பிஜி. இவர்களின் மகள் தான் கோபிகா.இவர் தற்போது மும்பையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சியில் உள்ளார்.
பள்ளி நாட்கள் முதலே கோபிகாவின் கனவு விமான பணிப்பெண் ஆகவேண்டும் என்பதே. கண்ணூர் எஸ்.என்.கல்லூரியில் வேதியியல் பயின்றார் கோபிகா. அப்போதும் அவர் மனதில் விமானப் பெண் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் கோபிகாவின் பெற்றோர் தினக் கூலிகள். அவர்களுக்கு தனியார் கல்லூரியில் கோபிகாவை படிக்கவைக்கும் அளவுக்கு வசதி வாய்ப்பில்லை.
இந்நிலையில் இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. கோபிகாவுக்கு அவர் வாழும் பகுதியில் உள்ள பழங்குடிகள் முன்னேற்ற அதிகாரி மூலம் ஒரு விஷயம் தெரியவந்தது. அதாவது அவர், சர்வதேச ஏர் ட்ரான்ஸ்போர் அசோஷியேசனில் அரசு உதவியுடன் கஸ்டமர் சர்வீஸ் கோர்ஸ் பயில முடியும் என்பதை கோபிகா தெரிந்து கொண்டார். பின்னர் எவ்வித தாமதமும் இன்றி அவர் ஐஏடிஏவில் சேர விண்ணப்பித்தார். அங்கு பயிற்சி மேற்கொண்ட பின்னர் ஏவியேஷன் ட்ரெயினிங் அகடமியில் சேர்ந்தார். வயநாட்டில் உள்ள இந்த அகடமியில் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சிக்காக சேர்ந்தார். பின்னர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சேர நேர்காணலை எதிர்கொண்டார். அதில் அவர் வெற்றி பெற்றார். இன்னும் ஒரே மாதத்தில் அவர் பணியில் இணைவார்.
நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராகியுள்ளார் திரௌபதி முர்மு. இது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. ஒடிஷாவின் ராய்ரங்கப்பூரில் பிறந்தவர் திரௌபதி முர்மு. கடந்த 1997ஆம் ஆண்டு, ராய்ரங்கப்பூர் நகரப் பஞ்சாயத்துத் தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் திரௌபதி முர்மு. அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். ராய்ரங்கப்பூரில் இரண்டு முறை எம்.எல்.ஏ பதவி வகித்த திரௌபதி முர்மு கடந்த 2009ஆம் ஆண்டு பிஜு ஜனதா தளம் பாஜக கூட்டணியை முறித்த போது, அப்போதைய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர். மேலும், கடந்த 2015 முதல் 2021 வரை, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தவர் திரௌபதி முர்மு.
இந்நிலையில் பழங்குடியின பெண் விமான பணிப்பெண் செய்தி உற்சாகம் தருவதாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *