• Fri. Apr 19th, 2024

போராட்டத்தை முடித்துவீடு திரும்பும் விவாசாயிகள்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று தங்கள் கிராமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முகாமிட்டுக் கடந்த 378 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.எத்தனை நாட்களானாலும் வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறும் வரையில் வீடு திரும்ப மாட்டோம் என்று அறிவித்து, டெல்லி எல்லையில் முகாமிடுவதற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது. மத்திய அரசின் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கும் விவசாயிகள் செவி சாய்க்க வில்லை. அதுபோன்று காலவரையறை இன்றி சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.

இந்த சூழலில் 3 புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இரு அவைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டன. குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் வேளாண் சட்டங்கள் ரத்து சட்டம் 2021 கொண்டுவரப்பட்டது.இதையடுத்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை ஏற்று வழக்குகளை ரத்து செய்வதாகவும் மத்திய அரசு உறுதி அளித்தது.

இந்த சூழலில் விவசாயிகளும் தங்களது போராட்டத்தை இன்றுடன் முடித்துக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்தனர். அதன்படி இன்று டெல்லி சிங்கு, திகிரி, காசிபூர் எல்லைகளில் முகாம்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர்.விவசாயிகளின் இந்த வெற்றிப் பேரணி நேற்று நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் முப்படைத் தளபதி பிபின் ராவத் மறைவைத் தொடர்ந்து இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இன்று காலையில், சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வீடு திரும்புவதற்கு முன்பாக பஜனை பாடினர். சில விவசாயிகள் பயணத்தை தொடங்கிய நிலையில், சிலர் தற்போது எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்ட தங்களுடைய தற்காலிக கூடாரத்தை அகற்றி வருகின்றனர்.


அதுபோன்று, ஒரு ஆண்டு போராட்ட வெற்றியையும் விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். விவசாயிகள் டிராக்டர்களில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் அவர்களை வரவேற்க நெடுஞ்சாலைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.விவசாயிகள் வீடு திரும்புவது குறித்து விவசாயச் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத், “போராட்டத்தின் போது எங்களுக்கு உதவியாக இருந்தவர்களை நேரில் சந்தித்துப் பேச இருக்கிறோம். விவசாயிகள் ஏற்கனவே வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கிவிட்டனர். இன்று பெரும்பாலான விவசாயிகள் வீடு திரும்பி விடுவார்கள். எனினும் முழுமையாக டெல்லியிலிருந்து அவரவர் வீடுகளுக்குத் திரும்ப நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை ஆகும் என்று கூறினார்.

சிங்கு எல்லையிலிருந்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கர்னால் என்ற பகுதியில், விவசாயிகளின் டிராக்டர் ஒன்று லாரி மோதி விபத்தில் சிக்கியது. இதில் டிராக்டர் சாலையோரம் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்ததில் 2 விவசாயிகள் காயமடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மற்ற டிராக்டர்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *