சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும், உலக பிரசித்தி பெற்ற ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றுத் திகழ்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் கொடியேற்ற திருவிழாவை துவக்கி வைத்தார்.
குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் கொடியேற்ற விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வருகிற 19ம் தேதி தேரோட்டமும், 20-ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் என கோயில் தீட்சிதர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக தேரோட்டத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும், அனைத்து நிகழ்ச்சிகளையும் பக்தர்கள் இன்றி கோவிலுக்குள்ளேயே நடத்திக் கொள்ள வேண்டும் எனவும் வருவாய்த்துறை, காவல்துறை தீட்சிதர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.