



மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயியை தாக்க முற்பட்ட திமுக பொறுப்பாளர், தமிழக அரசு விவசாயிகளுக்கு அள்ளி அள்ளி தருகிறது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசிய திமுக பொறுப்பாளருக்கு கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான எந்த விதமான நலத்திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி பேசினர்.

தேர்தல் வாக்குறுதி அளித்தபடி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை கூட நான்கு வருடமாக தமிழக அரசு சரிவர உயர்த்த வில்லை என அப்போது அவர்கள் பேசினர். ஆக்கூர் பகுதி திமுக பொறுப்பாளரான இளம்பருதி என்பவர் தமிழக அரசு விவசாயிகளுக்கு அள்ளி அள்ளித் தருகிறது என்று தவறான தகவலை தெரிவித்தார். இதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், விவசாயி ஒருவரை அவர் தாக்குவதற்கு முற்பட்டார். இதனைத் தொடர்ந்து மற்ற விவசாயிகள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


