• Sun. Oct 13th, 2024

வைகை அணையில் தீயணைப்பு துறை சார்பில் விபத்து கால பாதுகாப்பு செயல்முறை விளக்கம் .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் ஆண்டிபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் விபத்து காலங்களில் எவ்வாறு மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

முன்னதாக வைகை அணை பகுதியில் முன்பாக உள்ள தரைப்பாலத்தில் ,ஆற்றுப்பகுதியில் பொதுமக்கள் தவறி விழுந்தால் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது ,நீச்சல் தெரியாமல் இருந்தால் உடனடியாக எப்படி பாதுகாப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். காலியாக உள்ள கேன், பிளாஸ்டிக் பந்துகள், பிளாஸ்டிக் குடங்கள், பஸ், லாரிகளின் டயர் டியூப்புகளை பயன்படுத்தி தண்ணீரிலிருந்து மிதந்து வந்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

மேலும் வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் கசிவாகி தீப்பிடித்தால் அதை சமயோசிதமாக எப்படி அணைப்பது என்றும், வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் தீ பிடித்தால் முதல் கட்டமாக அந்த தீயை எவ்வாறு அணைப்பது என்றும் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்,

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வைகை அணைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் ,அவர்களுக்கு முன்பாக ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர் இந்த செய்முறை விளக்கம் செய்து காண்பித்தது எல்லாருடைய பாராட்டுகளையும் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *