• Wed. Apr 24th, 2024

#Exclusive ஸ்டாலினிடம் யார் பாட்சாவும் பலிக்காது.. திமுகவில் இணைந்ததுமே அதிரடி காட்டும் முத்துச்செல்வி!

Muthuselvi

அதிமுக தலைமையிடம் நடிக்கலாம், ஆனால் தி.மு.க தலைமையிடம் நடிக்க முடியாது என திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துச்செல்வி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முத்துச்செல்வி இந்த பெயரை தென்மாவட்ட மக்கள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். சங்கரன்கோவில் தொகுதியில் மறக்க முடியாத நினைவலைகள். கடந்த 2012ல் சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தேர்தல் தேதிக்கு முன்னரே 25 வயதே ஆன அதிமுக இளம் பெண்கள் பாசறையைச் சேர்ந்த முத்துச்செல்வியை வேட்பாளராக அறிவித்து அதிரடி காட்டினார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சங்கரன்கோவில் தொகுதியில் எம்.எல்.ஏ வாக இருந்த சங்கரலிங்கத்தின் மகள் தான் இவர்.

சங்கரன்கோவில் தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜெயலலிதாவை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி இன்று திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டிருக்கிறார் இவர். சாதனைகளைப் போலவே சர்ச்சைகளுக்கும் பெயர் போன முத்துச்செல்வி, தொகுதிக்குள் செல்வாக்குடன் இருப்பதாலேயே திமுக தலைமை இவரை மறுபேச்சில்லாமல் இணைத்துக் கொண்டது என்றும் திமுகவினர் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகின்றது.இதுகுறித்து முத்துசெல்வியிடம் பேசினோம்..,

அதிமுகவில் மிக குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று எம்.எல்.ஏ ஆன நீங்கள் திடீரென்று திமுகவில் ஐக்கியமாக என்ன காரணம்?

அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்தது அரசியலுக்கு வந்தவள் நான். ஆரம்பத்தில் இளம்பெண்கள் பாசறையில் அம்மா பதவி தந்தார். திடீரென இடைத்தேர்தல் வந்த போது வயது வித்தியாசம் பாராமல் எம்.எல்.ஏ ஆக வாய்ப்பும் கொடுத்தார். அனால் என் மீது ஒரு பொய்யான குற்றசாட்டு வந்த போது என்னை விசாரணையே செய்யாமல் தண்டனையும் கொடுத்தார். அதிமுகவில் தவறு செய்வதாக மொட்டை கடுதாசி வந்தால் கூட விசாரணை இல்லாமல் தண்டனை தரப்படுகிறது. ஆனால் திமுகவில் அப்படி இல்லை. திமுக தலைமை முறையான விசாரணைக்கு பிறகே ஒரு முடிவு எடுக்கிறது. இது தான் என்னைக் கவர்ந்த விஷயம். இந்த விஷயத்தில் திமுக தலைவர் நடுநிலையுடன் செயல்படுகிறார். அதனால் தான் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் ஆசியுடன் திமுகவில் இணைத்து கொண்டேன்.

அதிமுக தலைவி ஜெயலலிதாவின் மனதில் இடம் பெற்று எம்.எல். ஏவான நீங்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் என்ன ஆளுமையை அவரது தனித்தன்மையாக நினைக்கிறீர்கள்?

அதிமுக தலைமையில் அம்மா இருந்த போதும் சரி, அவரது காலத்துக்குப் பிறகும் சரி எளிதில் நெருங்க முடியாது. தலைமையை சுற்றி ஏகப்பட்ட அதிகார மையங்கள் உண்டு. அதைத் தாண்டி தலைமையை சந்திப்பதே கடினம். ஆனால் திமுக தலைமை அவ்வாறில்லை. திமுக தலைமையை எளிதில் நெருங்க முடியும். நமது குறைகளையும் சொல்ல முடியும். அதிமுக தலைமையிடம் நடிக்கலாம். ஆனால் திமுக தலைமையிடம் நடிக்க முடியாது. எதையும் விசாரித்த பின்பே திமுக தலைமை முடிவு செய்கிறது. இதை தான் திமுக தலைவரிடம் தனித்தன்மையான ஆளுமையாக பார்க்கிறேன். அதிமுக தலைமையை உண்மையால் வெல்ல முடியாது. ஆனால் திமுகவில் உண்மையோடு உழைத்தால் உயருவது நிச்சயம் என்றும் நினைக்கிறேன்.

நீங்கள் அதிமுகவில் இருந்த போது பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததாக உணருகிறீர்களா?

அம்மா இருக்கும் வரை பெண்களுக்கு அதிமுகவில் பாதுகாப்பு இருந்தது. அனால் இன்று பாதுகாப்பே கிடையாது. பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு பெற்று தந்த அம்மா ஆட்சியில் இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுக தலைவி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அடிமட்டத் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. அதிலும் பெண்களுக்கு அறவே மரியாதை இல்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை உருவாகி விட்டது. இதனால் மக்கள் பணி செய்வதற்கு பதில் இவர்களை சமாதானப் படுத்துவதிலேயே அதிமுக முக்கிய பிரமுகர்களின் நேரம் விரயமாகியது. கட்சியில் என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியவில்லை.

பதவியை எதிர்பார்த்து தான் திமுகவில் இணைந்துள்ளதாக அதிமுகவினர் கூறுகிறார்களே?

எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நான் திமுகவில் இணைய வில்லை. மக்கள் பணி செய்வதற்காகவே திமுகவிற்கு வந்துள்ளேன். தேர்தலில் சுயேட்சையாகவே போட்டியிடக் கூட தயாராக தான் இருந்தேன். ஆனால் திமுக தலைமை மகளிருக்கு தரும் மகத்துவத்தை பார்த்து தான் திமுகவில் இணைத்துள்ளேன். திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு படி செயல்படுவேன். உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் ஏற்கனவே சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக இருந்த முத்துசெல்வியை மீண்டும் திமுக வேட்பாளராக களம் இறக்கினால் வெற்றி நிச்சயம் என்று திமுக தலைமை கருதுவதாக தகவல். இதனால் தான் ஏற்கனவே இதே பதவியில் இருந்து அரசியல் பாரம்பரிய மிக்க முத்துச் செல்வியை திமுகவில் இணைத்துக் கொண்டது திமுக தலைமை என்ற கருத்தும் இருக்கிறது. வரும் காலங்கள் இதற்கு விடை சொல்லி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *