அன்னதானம் வழங்கும் ருசிகர நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வடை சுட்டு வழங்கினார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் வடை சுட்டு வழங்கியதை, பலரும் ரசித்துச் சென்றனர்.
இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு; மதுரையை அடுத்த நகரியில், பழனி செல்லும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அன்னதானம் வழங்கி வருகிறார். மூன்று வேளையும் சாப்பாடுடன் வடை அப்பளம், வத்தல், வடகம் உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் அமைச்சர் இன்று காலையில் அனைவருக்கும் உணவு வழங்கினார். அப்போது பக்தர்களுக்கு கொடுப்பதற்காக வடை சுட தயாரானது. யாரும் எதிர்பாராத வேளையில் அடுப்படிக்கு சென்றவர், தானே அமர்ந்து வடை சுட்டார். பின் அதனை பக்தர்களுக்கு வழங்கினார்.
அப்போது அங்கு வந்த பக்தர்கள் சிலர், ‘நன்கு வடை சுடுகிறாரே!’ என்று நகைச்சுவையாக சொல்லி, அவருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். உடன் பதில் அளித்த ஆர்.பி. உதயகுமார், “எனக்கு உண்மையான வடை தான் சுடத்தெரியும். ஒரு சிலரைப் போல வாயில் வடை சுட தெரியாது. வரவும் வராது!” என்று சிரித்தபடியே பதில் சொன்னார். இதனால் அங்கு கலகலப்பு ஏற்பட்டது .