ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குபதிவு எந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
நாளை வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் மற்றும் இதர அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 34 வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், துணை ராணுவ வீரர்கள், ரெயில்வே சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை ஆதாரமாக பயன்படுத்தி வாக்களிக்கலாம்.