

தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இந்த நிலையில்தான் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினர் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
அதாவது சுமார் 160 ஏக்கர் நிலம் உள்பட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 18 சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. 2002-ம் ஆண்டு தொடரப்பட்ட பணமோசடி வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதாவது கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்தபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீசார் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்து இருந்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.4 கோடியே 90 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தார்கள். இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறைக்கு சென்றது. அதன்பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவருடைய குடும்பத்தினர் 7 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. விசாரணையும் நடைபெற்றது. இந்த விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறையும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குப்பதிவை தொடர்ந்துதான் தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களையும், அவருடைய குடும்பத்தினர் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கில் அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் இது தொடர்பான ஆவணங்களை சமர்பிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் பத்து வருடங்கள் கழித்து தற்போது அமைச்சருக்கு செக் வைக்க காரணம் உள்ளாட்சி தேர்தலில் தென் தமிழகத்தில் எதாவது குளறுபடி செய்வதற்கு இருக்குமோ என்று கட்சியினரே கூறிவருகின்றனர்..