

பகாசுர ஊழல் பேர்வழிகளை எதிர்த்துப் போராடப் பணஉதவி செய்யுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. முதன் முதலாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மய்யம். எட்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நகராட்சித் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நல்லாருக்கீங்களான்னு நான் கேட்டால் பழக்க தோஷத்துல ‘ஆமா சார்’ என்று சொல்வீர்கள். அதையே சற்று மாற்றி ‘சந்தோஷமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டால், கொஞ்சம் யோசித்து ‘ஏதோ போகுது சார்..’ என லேசாக இழுப்பீர்கள். எங்கே போனது நமது மகிழ்ச்சி? யாரால் பறிபோனது நமது நிம்மதி? கொண்டாட்டமாக இருக்க வேண்டிய வாழ்க்கையைத் திண்டாட்டமாக மாற்றியது யார்? உணவு, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், மருத்துவம் என வாழ்க்கையின் அனைத்து அலகுகளையும் அரசியல்தான் தீர்மானிக்கிறது. அரசியல் நுழையாத இடமே இல்லை.
ஆனால், இந்த அரசியல் நாம் விரும்பினது அல்ல. நம் மேல் திணிக்கப்பட்ட ஒன்று. ஒரு பக்கம் மதவெறி, மறுபக்கம் ஊரையே அடித்து உலையில் போடத்துடிக்கிற ஊழல் வெறி, எல்லாப்பக்கமும் வாரிசுகளை வளர்த்து வாரிச்சுருட்டும் வெறி என்று தமிழ்நாடுசீரழிந்துகொண்டிருக்கிறது. ஒழிந்த நேரங்களில் இரண்டு கழகங்களும் ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவார்கள் அல்லது ஒருவரையொருவர் பழிவாங்குவார்கள்.நீங்களும் நானும் செலுத்திய வரிகள் நமக்கே திரும்பி வந்திருக்கவேண்டும். நமது நல்வாழ்விற்காகவும் எதிர்கால சந்ததியினரின் நலன்களுக்காகவும் செலவிடப்பட்டிருக்க வேண்டும்.மகிழ்ச்சியான, நிம்மதியான, பாதுகாப்பான ஒரு வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
விலைவாசியைக் கட்டுப்படுத்தி தரமான கல்வி, சிறந்த மருத்துவம், அதிக வேலைவாய்ப்புகள், தொழில் செய்யக் கடனுதவிகள் கொடுத்து இருந்தால் உங்கள் வாழ்க்கை எந்த ‘இலவசங்களும்’ இல்லாமல் தானே மேலே வந்திருக்கும். செய்தார்களா இவர்கள்?பெண் பிள்ளைகளைத் தனியாக எங்கேனும் அனுப்பி விட்டு நிம்மதியாக இருக்கமுடிகிறதா? திரும்பிய திசையெல்லாம் சாராய கடைகள், எந்த அரசுக்கட்டுமானம் எப்போது இடிந்துவிழுமெனச் சொல்ல முடியாது.
நல்ல தண்ணீருக்கு நாயாக அலைய வேண்டும். மழை வந்தாலோ முங்கிச் சாகவேண்டும். நம் பாதுகாப்பு இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை எனக் கூறியுள்ளார்.
