சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உப்பாற்றில் வரும் தண்ணீர் வரத்து தாங்காமல் கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாய் உடைந்து கிராமங்கள் தீவுகளாவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்மாய் கரையை பலப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மானாமதுரை ஒன்றியத்தைச் சேர்ந்த செய்களத்தூர் கிராமத்தின் கண்மாய் ஏற்கனவே மழையால் நிரம்பியுள்ளது. தற்போது அருகே உள்ள உப்பாற்றில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் வைகை ஆற்றுக்கு சென்று கொண்டிருந்தது. ஆற்றின் கரை உடைந்து தண்ணீர் செய்களத்தூர் கண்மாய்க்குள் செல்வதால் ஏற்கனவே நிரம்பியுள்ள இந்த கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி இராம.முருகன் கூறுகையில், செய்களத்தூர் கண்மாய் ஏற்கனவே நிரம்பியுள்ளது. உப்பாறு தண்ணீர் வரத்து கால்வாய் சரிவர தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள் வளர்ந்து நிற்பதால் அதில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் கரை உடைந்து செய்களத்தூர் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. ஏற்கனவே நிரம்பியுள்ள இந்த கண்மாயில் பல இடங்களில் கரைகள் சேதமடைந்துள்ளன. தண்ணீர் வரத்து தாங்காமல் செய்களத்தூர் கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கண்மாய் உடைந்தால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து அவை தனித் தீவுகளாகி விடும். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செய்களத்தூர் கண்மாய் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றார்.