விரைவில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், அங்கு அதிமுக போட்டியிட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதில், அதிமுக தரப்பில் வேட்பாளர்களை நிறுத்த கட்சி திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் அம்மாநிலத்தில் கோலார், கோலார் தங்க வயல், காந்திநகர் ஆகிய இடங்களில் போட்டியிட்டு அதிமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
எனவே அங்கு தேர்தல் நெருங்குவதால் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் வகையிலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வகையிலும், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். மேலும் அதற்கான தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்த உத்தரவை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
அதிமுகவின் பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை (ஏப்.,10) விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினமே இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட உள்ளது.