அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.
அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சேலத்தில் நேற்று மாலை அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா மணிமண்டபத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ள தேசிய தலைவர்களே தவிர, மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்றார்.
அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்பாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மீண்டும் தாய் கழகத்திலிருந்து இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை என்றும் தெரிவித்தார்.
எம்ஜிஆர் கட்சியை துவங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவருக்கு பிறகு ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அதேபோல் எதிர்வரும் தலைவர்களும் சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவோம் என்றார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.