சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை தமது ஆதரவாளரான சர்ச்சைக்குரிய வலது கரம் சேலம் இளங்கோவனுக்கு விட்டுக் கொடுத்துள்ளார் மாஜி முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.
அதிமுக மொத்தம் 75 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவின் உட்கட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு யார் யாருக்கு எந்த பதவி என்பது தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 21, 25 ஆகிய தேதிகளில் 75 மாவட்ட கழகங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தற்போது முதல் கட்டமாக 41 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி வடக்கு -கடம்பூர் ராஜூ; தூத்துக்குடி தெற்கு – எஸ்.பி. சண்முகநாதன்; கன்னியாகுமரி கிழக்கு -எஸ்.ஏ.அசோகன்; தேனி -சையதுகான், வடசென்னை வடக்கு (கிழக்கு ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை வடக்கு (மேற்கு) டி.ஜி.வெங்க டேஷ்பாபு, வடசென்னை தெற்கு (மேற்கு) – நா.பாலகங்கா, தென்சென்னை தெற்கு (மேற்கு) -விருகை ரவி, சென்னை புறநகர் -கே.பி.கந்தன்; காஞ்சிபுரம் -வி.சோமசுந்தரம், செங்கல்பட்டு கிழக்கு – எஸ்.ஆறுமுகம், திருவள்ளூர் வடக்கு சிறுணியம் பலராமன் திருவள்ளூர் மத்தி பா.பென்ஜமின், திருவள்ளூர் தெற்கு – வி.அலெக்சாண்டர், திருவள்ளூர் கிழக்கு – மாதவரம் வி.மூர்த்தி; வேலூர் மாநகர் அப்பு, வேலூர் புறநகர் -வேலழகன், திருப்பத்தூர் -கே.சி.வீரமணி, ராணிப்பேட்டை- சு.ரவி, திருவண்ணாமலை வடக்கு – தூசி கே.மோகன், திருவண்ணாமலை தெற்கு -அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, கடலூர் கிழக்கு – கே.ஏ. பாண்டியன், கடலூர் தெற்கு -சொரத்தூர் ராஜேந்திரன், விழுப்புரம் – சி.வி.சண்முகம்.
கிருஷ்ணகிரி கிழக்கு -கே.அசோக்குமார், நாமக்கல் -பி.தங்கமணி, ஈரோடு புறநகர் – கே.ஏ.செங்கோட்டையன், கோவை புறநகர் வடக்கு -அருண் குமார், கோவை புறநகர் தெற்கு – எஸ்.பி. வேலுமணி, திருச்சி புறநகர் – பரஞ்ஜோதி, அரியலூர் – எஸ்.ராஜேந்திரன், நாகப்பட்டினம் – ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை – எஸ்.பவுன்ராஜ்; திருவாரூர் – ஆர்.காமராஜ், மதுரை புறநகர் கிழக்கு – ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன், விருதுநகர் – ரவிச்சந்திரன், விருதுநகர் மேற்கு – கே.டி.ராஜேந்திரபாலாஜி, திருநெல்வேலி – கணேசராஜா, தென்காசி வடக்கு – கிருஷ்ண மூர்த்தி, தென்காசி தெற்கு – செல்வமோகன் தாஸ்பாண்டியன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக ஆர். இளங்கோவன் (தலைவர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி) நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இப்பதவிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். கடந்த 11 ஆண்டுகளாக சேலம் புறநகர் மா.செ.பதவியை எடப்பாடி பழனிசாமி தம் வசம் வைத்திருந்தார்.
முதல்வர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என உயர் பதவிகளை வகித்த போதும் மா.செ. பதவியை விட்டுக் கொடுக்கவில்லை எடப்பாடி. இப்போதும் அப்பதவிக்கு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் திடீரென தமது ஆதரவாளரான சேலம் இளங்கோவனுக்கு மா.செ. பதவியை விட்டுக் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர் முதல்வராக இருந்த காலத்தில் நிழல் முதல்வராக கோலோச்சியவர் சேலம் இளங்கோவன். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கிறார். அத்துடன் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் சேலம் இளங்கோவன் சிக்கக் கூடும் என கூறப்படும் நிலையில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை தாரைவார்த்து கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.