எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் எனது காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் என சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.
சட்டசபையில் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தொடரின் போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டசபையில் இருந்து வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் , செய்தியாளர்கள் சில கேள்வி எழுப்பினர்.
அப்போது அந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துக் கொண்டே உதயநிதியின் காரில் ஏற முயன்றார். உடனே காவலர் வந்து சார் இது உங்கள் கார் இல்லை, உங்களது கார் அங்கே இருக்கிறது என கூற உடனே எடப்பாடி பழனிச்சாமியும் ஓ சாரி என கூறிவிட்டு தனது பாதுகாவலரிடம் ஏம்ப்பா நம்ம வண்டிகிட்ட சரியா கூட்டிட்டு போக மாட்டீயா என கேட்டார்.
சமூகவலைதளங்களில் வைரல் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதே போல் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமியின் காரில் உதயநிதி ஸ்டாலின் ஏற முயன்றார். உடனே அந்த காரில் ஜெயலலிதா புகைப்படம் இருந்ததை கண்டு சுதாரித்துக் கொண்டார். இவ்வாறு இருவரும் மாறி மாறி காரில் ஏறியதற்கு காரணம் இருவரது காரும் ஒரே நிறம், ஒரே நிறுவன கார்கள்.
இந்த குழப்பத்தால் ஒருவர் காரில் மற்றொருவர் ஏறும் சூழல் நிகழ்கிறது. இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எனது காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.
ஆனால் எனது காரை கமலாலயத்திற்கு (பாஜக அலுவலகம்) மட்டும் எடுத்து செல்ல வேண்டாம். கடந்த ஆண்டு நான் பேசும் போது எடப்பாடி பழனிச்சாமி வெளிநடப்பு செய்தார். ஆனால் இந்த ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவையில் இருக்கிறார், அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் வெளிநடப்பு செய்தாலும் எனது காரில்தான் ஏற முயல்கிறார். அவர் மட்டுமில்லை, நானும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது காரில் ஏற முயன்றேன் என்றார். சட்டசபையில் உதயநிதி நகைசுவையாக பேசியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
உதயநிதியின் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுகவினரின் கார் எப்போதும் எம்ஜிஆர் மாளிகைக்குத்தான் செல்லும் என எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ பன்னீர் செல்வம் பதில் கொடுத்தார்.
எடப்பாடி பழனிச்சாமி எனது காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.. உதயநிதிஸ்டாலின் நகைசுவை பேச்சு
