• Fri. Apr 26th, 2024

அதிகரிக்கும் மின்வெட்டு.. 8 நாள் மட்டும் நிலக்கரி இருப்பு..மோடியை விமர்சித்த ராகுல்

ByA.Tamilselvan

Apr 21, 2022

இந்தியாவில் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது. புல்டோசர் வெறுப்புணர்வை கைவிட்டு மின் நிலையங்களை இயங்க செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடியை, ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் 12 மாநிலங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக தென் இந்திய மாநிலங்களில் கடந்த சிலவாரங்களாக மின்வெட்டு பிரச்சனை புதிதாக ஏற்பட்டுள்ளது
நேற்று தமிழகத்தின் பல இடங்களிலும் மின்வெட்டுகள் ஏற்பட்டன. இரவில் ஏற்பட்ட மின் துண்டிப்பால் மக்கள் இருளில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இதேபோல் கர்நாடகம், ஆந்திரா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் மின்வெட்டுக்கு நிலக்கரி பற்றாக்குறை தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் ஹரியானா உள்பட 12 மாநிலங்களில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்து வருகிறது. இதனால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. .
இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்
8 ஆண்டுகால வார்த்தைஜால பேச்சின் ரிசல்ட் என்பது வெறும் 8 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பது தான். மந்த நிலை அதிகரித்து கொண்டே செல்கிறது. மின்வெட்டு என்பது சிறுதொழில்களை நசுக்கி, அதிகமானவர்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தி விடும். எனவே புல்டோசர் வெறுப்புணர்வை கைவிட்டுவிட்டு மின் நிலையங்களின் உற்பத்திக்கான சுவிட்சை ஆன் செய்ய வேண்டும்” என விமர்சனம் செய்துள்ளார்.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் கலவரக்காரர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் பணியை அம்மாநிலங்களில் ஆளும் பாஜக அரசு மேற்கொள்கிறது. மேலும் நிலக்கரி துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். இதை தான் மறைமுகமாக ராகுல்காந்தி குறிப்பிட்டு
விமர்சித்துள்ளார்.
நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
கடந்த அக்டோபரம் மாதம் இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் குஜராத், ஹரியானா, பஞ்சாப், ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் மின் வெட்டால் பாதிக்கப்பட்டது. அப்போது இதேபோல் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *