

கோயம்புத்தூரில் உள்ள சிவா டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூரில் இந்த நிறுவனம் 1983-ம் ஆண்டு முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இது பண்ணாரி அம்மன் குழுமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சரவணன் என்பவருக்குச் சொந்தமானது. சிவாஸ் ஃபைன் பிராந்தி, மானிட்டர் டீலக்ஸ் பிராந்தி, கிளாசிக் கிராண்டி ரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மதுபானங்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இதன் ஆண்டு உற்பத்தி சுமார் 11 மில்லியன் லிட்டர் ஆகும்.
இந்த நிறுவனம் தமிழகத்திற்கு மிகக் குறைந்த அளவிலேயே மதுபானங்களை விற்பனை செய்கிறது. மாறாக, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. நேற்று காலை 11 மணியளவில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரில் வந்து நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனையைத் தொடங்கினர். நேற்று மாலை 6 மணி வரை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில், சிவா டிஸ்டில்லரீஸ் நிறுவனம் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் அல்லது பிற முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. சோதனையின் முடிவில் முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

