

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெட் பாங்க் வங்கிக் கொள்ளை தொடர்பாக கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளரை விசாரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, ‘பெட் பாங்க்’ என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த (ஆக.13) பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வங்கியில் நுழைந்த மர்ம நபர்கள் , பணியில் இருந்த மூன்று ஊழியர்கள் மற்றும் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கத்திமுனையில் கட்டி போட்டு, லாக்கரில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.
போலீஸார் விசாரணையில் வங்கியில் பணிபுரிந்த ஊழியர் முருகன் முருகன் என்பவர் தன் கூட்டாளிகளுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளை சம்பவம் தொடர்பாக முருகன் கூட்டாளிகள் பாலாஜி, 28, சந்தோஷ் , 30, சக்திவேல் ஆகிய 3 பேர் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 18 கிலோ நகை மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான முருகனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இந்தநிலையில், கொள்ளை கும்பல் கொள்ளையடிக்கபப்ட்ட நகைகளை விற்பது தொடர்பாக கோவை நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீவஸ்தவ்வை தொடர்பு கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

