• Mon. Apr 28th, 2025

தைவானில் இன்று காலை நிலநடுக்கம்

Byவிஷா

Apr 9, 2025

தைவான் நாட்டில் இன்று காலை 5.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.
தைவானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக தலைநகரான தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியது, இது மக்களிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் சில வினாடிகள் மட்டுமே நீடித்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, வடகிழக்கு கடற்கரையில் உள்ள இலான் நகரிற்கு தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தீவுநாடு தைவான், நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியிலேயே அமைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு தெற்கு தைவானில் ஏற்பட்ட ஒரு பெரிய நிலநடுக்கத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் 1999 இல் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.