சாலை அமைப்பதில் முறைகேடு நடைபெற்றால் எந்தவிதமான சமரச பேச்சுக்கும் இடமில்லை என்றும், ஒப்பந்ததாரர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
சிவகங்கை மாவட்டத்தில் 7.60 கி.மீ தூரத்தில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புறவழிச்சாலை பணிகளை அவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உடனுடன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ஒப்பந்த பணிகளில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் முன்பே செலுத்திய தொகை அபராதமாக வசூலிக்கப்படும். புதிய சாலைகள் அமைப்பின்போது வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நட ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
மேலும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.20 கோடியில் 28 ஆயிரம் சதுர அடியில் கட்டடம், மேலும் ரூ.10 கோடியில் இரண்டாவது கட்டடம் கட்டப்படுகிறது. இதில் அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், ஆய்வகம், தீவிர சிகிச்சை பிரிவுகள் உட்பட முக்கிய சேவைகள் உருவாக்கப்படுகின்றன.
அதே நேரத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1266 கோடி மதிப்பில் 880 கி.மீ சாலைகள், 49 தரைப்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் 48-க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகள் உள்ளன; அவற்றின் வசூல் காலம் முடிந்தும் கட்டணம் வசூலிக்கப்படுவதை ஒன்றிய அரசு நியாயப்படுத்துவதாகவும், இந்த விவகாரத்தில் பலமுறை கேட்கப்பட்டும் தீர்வு வழங்கப்படவில்லை என்றும் இன்று மதியம் சுமார் ஒரு மணியளவில் குற்றம்சாட்டினார்.