• Thu. Apr 24th, 2025

திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்: துரைமுருகன் வலியுறுத்தல்

ByP.Kavitha Kumar

Mar 19, 2025

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்றுமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.

எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்குச் சொந்தமான இடங்களிலும் – பொது இடங்களிலும் வைத்துள்ள திமுக கொடிக் கம்பங்களை ‘மதுரை உயர் நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் அகற்றிட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட திமுக கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.