குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பாஜக சார்பில் யாரை நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டனர். இரு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர்.
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 18-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பில் பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரௌபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார்.
15 பேரின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. திரௌபதி முர்மு 3,78,000 வாக்கு மதிப்பும், யஷ்வந்த் சின்ஹா 1,45,600 வாக்கு மதிப்பும் பெற்றுள்ளனர். எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரௌபதி முர்மு பெற்றுள்ளார். இதன்மூலம் திரௌபதி முர்மு 2,32,400 வாக்கு மதிப்பு முன்னிலையில் இருக்கிறார்.
20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டபின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி பி.சி.மோடி வெளியிடுவார். நாளை காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் முதல் முதல் குடியரசுத்தலைவர் வரை…
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்று உள்ளார். ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பிறந்தார் திரௌபதி முர்மு. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக இளநிலை உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் ஒரு சாதாரண கவுன்சிலராக பதவி வகித்து இருக்கிறார். ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அமைச்சராக பதவியேற்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார் திரௌபதி முர்மு. வரும் 25 ஆம் தேதி இவர் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அச்சமின்றி செயல்படுவார் என நம்புகிறேன்!” திரௌபதி முர்முவுக்கு யஷ்வந்த் சின்ஹா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே போல பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் டூடே குழுமமும் தன் வாழ்த்தை குடியரசு தலைவர் முர்முவுக்கு தெரிவித்துக்கொள்கிறது.