மதுரை மருத்துவ மாணவர்கள் புதிய முறையில் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி வருத்தம் அளிக்கும் செயல் தான். ஆனால் தவறிழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “30-04-2022 அன்று மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில், தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்த ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கியத்தைக் கூறி மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்ததால் ஏற்பட்ட சர்ச்சையில், தவறேதும் இழைக்காத மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ஏ.ரத்தினவேலை காத்திருப்புப் பட்டியலில் தமிழக அரசு வைத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
பாரம்பரிய உறுதிமொழியான ஹிப்போகிராடிக் உறுதிமொழிக்குப் பதிலாக ‘மகரிஷி சரக் சபத்’ என்ற பெயரில் மருத்துவ மாணவர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட உறுதிமொழியை புதிதாக மருத்துவம் பயில வரும் மாணவ, மாணவியர்கள் ஏற்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் , இது மாணவர்களின் விருப்பம் தானே தவிர கட்டாயம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவக் கல்லூரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்திலிருந்து தாங்கள் தான் இந்த புதிய உறுதிமொழியை தேர்ந்தெடுத்ததாகவும், வரவேற்பு விழா நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லாததால் பதிவிறக்கம் செய்த உறுதிமொழி படிவத்தை எந்தப் பேராசிரியரிடமும் தாங்கள் காண்பிக்கவில்லை என்றும், இது குறித்து கல்லூரி முதல்வருக்கு ஏதும் தெரியாது என்றும், இந்த ஒற்றை வாக்கியத்திற்காக கல்லூரி முதல்வர் மாற்றப்படுவார் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும், நேர்மையான, ஊழலற்ற முதல்வரை தாங்கள் இழக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.
சமஸ்கிருதத்தில் உள்ளதை ஆங்கிலத்தில் எழுதி வாசித்ததாகவும், சமஸ்கிருதத்தில் படிக்கவில்லை என்றும், சமஸ்கிருதத்தில் இருக்கும் ‘மகரிஷி சரக் சபத்’ உறுதிமொழி படிவத்தை ஏற்கக்கூடாது என்று எந்த அறிவிப்பும் தமிழக அரசிடமிருந்து பெறப்படவில்லை என்றும், நேற்று முன்தினம் தான், அதாவது நிகழ்ச்சி முடிந்த பின்புதான், இனி வருங்காலங்களில் ஹிப்போகிராடிக் உறுதிமொழியைத் தான் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேபோன்ற உறுதிமொழி பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எடுக்கப்பட்டதாகவும், அதற்காக யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது என்பது ஏற்கத்தக்கது அல்ல. அரசின் இந்த முடிவு பாரபட்சம் கொண்டதாகும்.
‘மகரிஷி சரக் சபத்’ உறுதிமொழி குறித்து வருகின்ற செய்திகளைப் பார்க்கும்போது, தமிழக அரசு சார்பில் தெளிவான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்பதும், இந்த உறுதிமொழி படிக்கப்படுவது குறித்து யாரிடமும் மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்பதும், பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் இதுபோன்ற உறுதிமொழி ஏற்கெனவே எடுக்கப்பட்டபோது எவ்வித நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. இதன்மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிந்தே எந்தத் தவறும் செய்யவில்லை என்பதும் தெரிய வருகிறது.
மருத்துவ மாணவர்கள் புதிய முறையில் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி வருத்தம் அளிக்கும் செயலாக இருந்தாலும், அரசின் சார்பில் தெளிவான அறிவுரையை முன்கூட்டியே வழங்காதது இந்த நிகழ்வுக்கு ஒரு முக்கியக் காரணம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தவறிழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, மருத்துவர் ஏ. ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியமர்த்தவும், இனி வருங்காலங்களில் முன்கூட்டியே உரிய அறிவுரைகளை அரசின் சார்பில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.