தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது 2வது முறையாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், பயிர்சேத தொகையை அதிகரிக்க வேண்டும், பொங்கலுக்குப் பணம் வழங்க வேண்டும், கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், திமுக தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று (டிச.9) நடைபெற இருந்த நிலையில், நேற்று (டிச.8) குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டமும் ஒத்திவைக்கப்பட்டு 11ஆம் தேதி நடைபெறுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்களால் கூட்டாக அறிவிக்கப்பட்டது.
தற்போது 2வது முறையாக, வருகின்ற 17ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.