சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், மண்டல வாரியாக பொறுப்பார்களை திமுக தலைமை நியமித்துக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மாநகரச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு எதிராக கீழ்மட்ட திமுக நிர்வாகிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருப்பதுதான் புதுக்கோட்டை அரசியலின் பரபரப்பே.
புதுக்கோட்டை மேயர் திலகவதியின் கணவர் செந்தில் தான் புதுகை மாநகர திமுக செயலாளராக முன்பு இருந்தார். உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பரில் அவர் திடீரென உயிரிழந்தார். மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்தது மாநகர திமுக-வினரை நிலைகுலையச் செய்தது.
இந்த நிலையில் இந்த சோகமெல்லாம் மறைந்து அடுத்த சில வாரங்களில் நடந்த செந்திலின் மகன் கணேஷின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். அந்த சமயத்தில் மாநகரச் செயலாளர் பதவியை கணேஷ_க்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதேபோல் இன்னும் சிலரும் அந்தப் பதவிக்காக அமைச்சர்களின் சிபாரிசுகளுடன் முட்டி மோதினர். இறுதியில், லிஸ்ட்டிலேயே இல்லாத வே.ராஜேஷ் என்பவரை கடந்த மார்ச்சில் மாநகர் பொறுப்பாளராக தலைமை அறிவித்தது
இதை ஏற்காத பெரும்பாலான வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜேஷை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அமைச்சர்களைச் சந்தித்தும் முறையிட்டனர். அப்படியும் எதுவும் நடக்காததால் நேராக அறிவாலயத்துக்கே சென்று ஸ்டாலினைச் சந்தித்து முறையிட்டுவிட்டு சென்னையிலேயே டேரா போட்டனர். ஆனால், வாரக் கணக்கில் ஆகியும் தலைமையும் மவுனம் சாதித்ததால் சத்தமில்லாமல் ஊருக்குத் திரும்பியது சங்கட கோஷ்டி.
இந்த நிலையில், அண்மையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர், ராஜேஷை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் ரகுபதியும், புதுகை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியனும் சமாதானம் செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாநகர திமுக-வினர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,
“திமுக-வின் என்ஆர்ஐ நல அணி இணைச் செயலாளரும் மாநிலங்களவை எம்பி-யுமான புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லாவின் சிபாரிசில்தான் ராஜேஷ் மாநகர பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதில் அமைச்சர் அன்பில் மகேஸின் கையும் இருப்பதாகச் சொல்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் தீவிரம் காட்டும் அமைச்சர் கே.என்.நேருவையும் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியனையும் கலக்காமல் இந்த நியமனம் நடந்தது தான் பிரச்சினையே” என்றனர். தொடக்கத்தில் எதிர்ப்பு இருக்கும் போகப் போக சரியாகிவிடும் என தலைமை நினைத்தது. ஆனால், போகப் போக பிரச்சினை பெரிதாகிக் கொண்டே தான் போகிறதே தவிர அடங்குவதாகத் தெரியவில்லை. மே 21-ம் தேதி திமுக மண்ட பொறுப்பாளர் அமைச்சர் நேரு கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. அப்போதும் ராஜேஷை மாற்றக் கோரி நிர்வாகிகள் சிலர் கோஷம் போட்டனர்.
இதைக் கேட்டு சுளீர் ஆன நேரு, ‘‘ராஜேஷை தலைமை தான் நியமித்துள்ளது. கட்சிக் கூட்டத்தில் இதெல்லாம் வேண்டாத வேலை. ஆலோசனைகளை மட்டும் தெரிவியுங்கள்’’ என்று சொல்லி அமளியை அடக்கினார். இதனிடையே, இந்த நிகழ்ச்சிக்காக அப்துல்லாவின் படத்துடன் ராஜேஷ் வைத்திருந்த ஃப்ளெக்ஸ்களில் புதுக்கோட்டை மேயர் திலகவதி மற்றும் எம்எல்ஏ-வான முத்துராஜா ஆகியோரின் படங்கள் இல்லை. இதைப் பார்த்துவிட்டு கொதித்துப் போன சிலர், அவற்றை கிழித்தெறிந்தனர். இன்னும் சிலர், ராஜேஷை மாற்றக் கோரி போஸ்டர்களையும் ஒட்டி இருந்தார்கள்.
இது குறித்து ராஜேஷ் தெரிவித்தாவது..,
‘‘சுமார் 24 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட மாணவர் அணி, தொண்டர் அணியில் இருந்துள்ளேன். எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களையும், கூட்டங்களையும் முன்னின்று நடத்தியுள்ளேன். இதையெல்லாம் அறிந்துதான் எனக்கு மாநகர் செயலாளர் பொறுப்பை வழங்கியது தலைமை. பொறுப்பேற்ற நாள் முதல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறேன். மொத்தம் உள்ள 42 வட்டச் செயலாளர்களில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் என்பக்கம் இருக்கிறார்கள். எஞ்சிய சிலர் தான் தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறார்கள்’’ என்று சொன்னார் அவர்.
உங்கள் சிபாரிசில் தான் ராNஜுக்கு மாநகரச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாமே என எம்.எம்.அப்துல்லா எம்பி-யிடம் கேட்டதற்கு, ‘‘எனது பரிந்துரையில் தான் ராNஜுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது என்பதற்கெல்லாம் கருத்துச் சொல்ல முடியாது. எல்லாவற்றையும் கட்சி தலைமை தான் முடிவெடுக்கிறது’’ என்றதோடு முடித்துக் கொண்டார் அவர். கடைசியாக கிடைத்த தகவல்படி, ராஜேஷ் விவகாரத்தில் பொறுமையிழந்து போயிருக்கும் வட்டச் செயலாளர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துவிடும் முடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.