• Thu. Mar 27th, 2025

டெல்லியில் கருப்பு உடை அணிந்து திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!

ByP.Kavitha Kumar

Mar 11, 2025

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2024-25-ம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்கும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவ ருகின்றன.

இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கை, கல்வி நிதி தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பேசும் போது, திமுக எம்.பிக்கள் நாகரீகமற்றவர்கள் என்று கூறினார். இதனால் ஆவேசமடைந்த திமுக கூட்டணி எம்.பிக்கள். நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் நாடாளுமன்றம் சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய தனது கருத்தை திரும்பப் பெறுவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பு உடை அணிந்து, பதாகைகளை ஏந்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.