• Sun. Mar 16th, 2025

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்- ஆதரவை திரட்ட ஒடிசா செல்லும் திமுக குழு!

ByP.Kavitha Kumar

Mar 11, 2025

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட ஒடிசா, கொல்கத்தா, தெலங்கானா உள்பட 7 மாநில முதலமைச்சர்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட திமுக
பிரதிநிதிகள் குழு இன்று தயாராகி விட்டது.

2026-ம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழக மக்களவை தொகுதிகள் குறையும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அத்துடன் தென் மாநிலங்களின் தலைக்கு மேல் எல்லை நிர்ணயம் என்று வாள் தொங்கி கொண்டிக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து அண்மையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியிருந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. அக்கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. தொடர்ந்து திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 9-ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

இதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட ஒடிசா, தெலங்கானா உள்பட 7 மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களைச் சந்திக்க திமுக பிரதிநிதிகள் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். இந்தக் குழுவைச் சேர்ந்த தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் ஒடிசாவிற்கு இன்று (மார்ச் 11) சென்று முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேச உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாளை (மார்ச் 12) அமைச்சர் பொன்முடி மற்றும் அப்துல்லா எம்.பி ஆகியோர் கொல்கத்தாவிற்கும், நாளை மறுநாள்(மார்ச் 13) அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்பி ஆகியோர் தெலங்கானா செல்ல இருக்கின்றனர்.