மதுரை விமான நிலையம் அருகே பரம்புபட்டியில் 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவில் கண்டுபிடிப்பு.
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் ,முனைவர் இலட்சுமண மூர்த்தி ஆகியோர் மாணவர்களுடன் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொள்ளும் போது விமான நிலையம் பின்புறம் மண்ணில் புதைந்த நிலையில் கலை நுட்பத்துடன் கி.பி.17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கள ஆய்வாளர்கள் கூறியதாவது ..
சங்க காலம் முதல் தமிழர் கலாச்சாரத்தில் நடுகற்கள் வழிபாடு முறை காணப்பட்டன .குறிப்பாக மன்னர்களுக்கு இடையே ஏற்படுகின்ற போர் பூசல் மற்றும் பிற காரணங்களால் இறந்த வீரர்களுக்கு அவர்களுடைய நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்யும் முறை இருந்தது .
மாலைக்கோவில்
நிரை கவர்தல் , மீட்டல் , எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால் இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறிய மனைவிக்கு அமைக்கப்பட்ட நடுகல்லின் மேல் எழுப்பப்படும் கோவில் மாலை கோவில் எனப்படும் .
மாலைக்கோவில் அமைக்கப்படும் சிற்பத்தில் கணவருடன் மனைவியும் இருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும். இப்பெண் சுமங்கலியாக இறந்தால் என்பதை காட்ட கை உயர்த்தி இருப்பது போன்று அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவராகவும் காணப்படுவாள்.மனைவியின் உருவம் வீரன் உருவத்தை விட சிறியதாகவும் கைகள் மட்டும் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது.இத்தகைய நடுகல்லை குடும்பத்தினருடன் ஊராரும் கோவில் அமைத்து வழிபட்டு வருவது வழக்கம்.
இத்தகைய கோவில்களை மாலையீடு, மாலையடி ,தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பார்.
இப்பகுதி வேளாண்மை செறிந்த பகுதியாகவும் வணிக சந்தை கூடம் இருந்ததாகவும் வேளாண் பகுதியை பாதுகாப்பதற்காக எல்லைப் பகுதியில் போர் வீரர்கள் நிறுத்தப்பட்டதாக அறியமுடிகிறது அவன் உயிர் நீத்த பின்பே மனைவி உடன்கட்டை ஏறியதற்க நடப்பட்ட கல் சதிக்கல்லாக அறியலாம்.
புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட சதிக்கல் தோரணவாயில் கலைநயத்தோடு 4 அடி உயரம் 3 அடி அகலமும் கொண்டது . கல் சிற்பத்தில் ஆண் மற்றும் பெண்ணின் தலையின் கொண்டைப் பகுதி சற்று சாய்வாகவும், ஆடவன் கையில் நீண்ட கத்தியும், அணிகலன்களுடன் கால் பகுதியை மடக்கி தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது.இக்கல் சிற்பத்தை தற்போது மக்கள் மாலைக்கோவில் என்று வழிபடுகின்றனர்.
நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் மையமாகக் கொண்ட மதுரையை சுற்றி பல குறுநில மன்னர்கள் ஆண்ட வரலாற்று தடயங்கள் புதைந்த நிலையில் கேட்பாரற்று காணப்படுகிறது.
என்பதை நாம் அறிய முடிகிறது. இதுபோன்ற கற்சிற்பங்கள் பாதுகாத்தல் நமது வரலாற்று சுவடுகளை அழியாமல் பாதுகாக்க முடியும் என்று கூறினார்கள் .