மதுரை சுந்தரராஜபுரம் எல்.எல் ரோடு பகுதியை சேர்ந்தவர் சித்ராதேவி வயது இருபத்தி ஒன்பது. இவர் நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக தகவலின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது சித்ரா தேவியை அவரது கணவர் சதீஷ்குமார் உருட்டுக்கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சித்ராதேவி அடித்துக் கொன்றதாக, சதீஷ்குமார் போலீசாரிடம் பிடிபட்டார். அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று, அவரிடம் இது தொடர்பாக விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறுகையில், “எனக்கும் சித்ராதேவிக்கும் காதல் திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சித்ராதேவி அதே பகுதியில் வசிக்கும் சிலரிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார். இதனால் எனக்கு அவளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை தட்டிக் கேட்டேன். இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது எல்லாம் சித்ராதேவி கோபித்துக்கொண்டு அனுப்பானடியில் உள்ள தாய் பார்வதி வீட்டுக்கு செல்வது வழக்கம். நான் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவேன். இதனால் எனக்கு மாமியார் வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் நான் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தேன். அப்போது எனக்கும், சித்ராதேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினேன். இதில் சித்ராதேவி இறந்து போவார் என்று நினைக்கவில்லை” என்று தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து காதல் மனைவியை அடித்துக் கொன்றதாக கணவர் சதீஷ் குமாரை கைது செய்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் காதல் மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது