• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாட்டரசன்கோட்டை அருகே 3500 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை …

ByA.Tamilselvan

Dec 12, 2022

சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டை அருகே பெருங்கற்கால கல்வட்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்காலை எச்சக் கழிவுகளை சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா, கள ஆய்வாளர் சரவணன், இணைச் செயலர் முத்துக்குமரன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது.
சிவகங்கை தொல்நடைக்குழு சிவகங்கை பகுதியில் உள்ள தொல்லியல்  எச்சங்களை கண்டறிந்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அதை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறாக சிவகங்கை பகுதியில் பல கல்வெட்டுகளையும் தொல்லியல் சான்றுகளையும் வெளிப்படுத்தியும் ஆவணப்படுத்தியும் வருகிறோம். சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர்கள் கள ஆய்வில் நாட்டரசன் கோட்டை தனியார் ஐடிஐ எதிர்ப்புறத்தில் செல்கிற மண்பாதையில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு எதிர்ப்பகுதியில் அமைந்துள்ள காட்டில் 3500 ஆண்டுகளுக்கு பழமையான கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன.
கல்வட்டங்கள்-
பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை, எச்சங்களை பாதுகாக்க நம் முன்னோர்கள் பெரு முயற்சி எடுத்து கல்வட்டங்களை அடுக்கியுள்ளனர், மேலும் அங்கு கிடைக்கக் கூடிய கல் வகைகளைக் கொண்டு அக்கல்வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, மலைப்பகுதிகளில் வெள்ளைக் கற்களாலும் சிவகங்கை மாவட்டம் போன்ற செம்மண் நிறைந்த பகுதிகளில் கிடைக்கப்பெறும் செம்புராங்கற்களாலும் கல்வட்டங்கள் அடுக்கப்பட்டுள்ளன.


ஏழுக்கு மேற்பட்ட கல்வட்டங்கள்-
இவை ஏழுக்கு மேல் காணப்படுகின்றன. அவற்றில் மூன்று, பெரும் பகுதி சிதைவுறாமல் காணப்படுகின்றன. மற்றவை பெரும் சிதைவுக்குள்ளாகி கற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கல்வட்டங்கள் இருந்ததற்கான எச்சமாக காணப்படுகின்றன.
இரும்பு உருக்காலை எச்சக் கழிவுகள்-
உலகில் மற்ற நாட்டினர் இரும்பு பயன்பாட்டை அறியும் முன்னரே தமிழர்கள் இரும்பின் பயன்பாட்டையும் அதை உருவாக்கவும் அறிந்திருந்தனர், இப்பகுதியில் இரும்பு உருக்காலை எச்சக்கழிவுகளான இரும்பு துண்டுகள் போன்ற கற்களும் மண்ணாலான குழாய்களும் பெரும் பகுதி காணப்படுகின்றன.


முதுமக்கள் தாழிகள்-
இந்த காட்டை அடுத்து ஓடை ஒன்று ஓடுகிறது அந்த ஓடையின் கரை மருங்கில் மூன்று முதுமக்கள் தாழிகள் சிதைவுற்ற நிலையில் காணக் கிடைக்கின்றன. ஓடைக்கு முன்பு உள்ள இந்த காட்டுப்பகுதி வனத்துறையின் கீழ் வருவதால் கடந்த செப்டம்பர் மாதம் மின்னஞ்சல் வழி வனத்துறையினருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கிடைக்கும் தொல்லியல் எச்சங்கள்-
சிவகங்கை மாவட்ட பகுதியில் தொடர்ச்சியாக கல்வட்டங்கள் இரும்பு உருக்காலைகள் முதுமக்கள் தாழிகள் காணக் கிடைக்கின்றன என்பதிலிருந்து இப்பகுதிகள் பழங்காலமாக பண்பாடு நிறைந்த மக்கள் வாழ்ந்த பகுதி என்பதை உறுதி செய்ய முடிகிறது, என்றார்.