• Thu. Apr 25th, 2024

திலீப்பிற்கு கிடைத்தது ஜாமின்!

நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு எதிராக தொடரப்பட்ட அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள உயர்நீதிமன்றம்.

2017 ம் ஆண்டு நடிகை காரில் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் மலையாள நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு திலீப் ஜாமினில் வெளிவந்தார். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பிறகு இந்த வழக்கு சிபிஐ.,க்கு மாற்றப்பட்டது.

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு திலீப், கொலை மிரட்டல் விடுத்ததால் சிபிஐ தரப்பில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திலீப்குமார் பயன்படுத்திய 6 மொபைல் போன்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் மொபைல் போன்களை ஒப்படைக்க திலீப் மறுத்து வந்தார். ஆனால் திலீப் கோர்ட்டில் மொபைல் போன்களை ஒப்படைக்க வேண்டும் என கேரள கோர்ட் உத்தரவிட்டது.

இதற்கிடையில் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திலீப் தரப்பில் ஜாமின் கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சாட்சிகளை அழிக்க முயற்சி செய்வார்கள் என கூறி போலீசார் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முன் ஜாமின் கேட்ட வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கோபிநாத், தான் நிபந்தனை விதித்துள்ளதாகவும், அதை மீறினால் ஜாமினை ரத்து செய்து விட்டு, அவரை கைது செய்யலாம் என கூறி ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

நடிகர் திலீப் தரப்பில் வாதிட்ட போது தாங்கள் போலீசாரின் 33 மணி நேர விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், 3 நாட்கள் தொடர்ந்து 11 மணி நேர விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளதாகவும் கூறினார். திலீப் தரப்பின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு, அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி. ஆனால் கொலை மிரட்டல் விவகாரத்தில் ஏற்கனவே திலீப்பிற்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து, அவரை கைது செய்து விசாரிக்க சிபிஐ தரப்பில் அனுமதி கேட்கப்பட்டு வந்தது.

ஜனவரி 9ம் தேதி டிவி சேனல் வெளியிட்ட ஆடியோ அடிப்படையில் திலீப் குமார் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜனவரி 24ம் தேதி மலையாள டைரக்டர் ரஃபி உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மிமிக்ரி கலைஞர்களை வைத்து இது தயாரிக்கப்பட்ட ஆடியோ என்றும், தான் கொலை மிரட்டல் விடுக்கவில்லை என்றும் திலீப் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *