தற்போதைய மாஸ் நடிகரின் இசை வெளியீட்டு விழா என்றாலே அவரது ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான்! ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவின்போதும் இவர் பேசும் பேச்சு, ட்ரெண்டிங் ஆவது வழக்கம் ஆகிவிட்டது! ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை என தயாரிப்பு தரப்பு திடீரென அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏன் என்று குழம்பியுள்ளனர். இதற்கு, அரசியல் ரீதியாக நடிகர் ஏதாவது எடக்கு மடக்கா பேசிட்டா சிக்கலாகிவிடும் என கருதியே இந்த நிகழ்ச்சியை தயாரிப்பு தரப்பு ரத்து செய்து விட்டதா என்கிற பேச்சுக்களும் அடிப்பட்டு வருகின்றன
சினிமாவில் நடிப்பதை தாண்டி, தனது ரசிகர்களுக்காக அந்த நடிகர் பேசுவது ட்ரெண்ட் ஆவது வழக்கம். மேலும், தன்னுடைய அரசியல் மீதான பார்வை குறித்தும், தனக்கு ஆளுங்கட்சியினர் கொடுத்த டார்ச்சர்கள் குறித்தும் அவர் பேச பேச சர்ச்சைகளும், விவாதங்களும் அடுத்த நொடியே சூடுபிடிக்க தொடங்கி விடும். இந்நிலையில், இந்த முறை மாஸ் நடிகர் மைக்கை பிடித்து என்ன பேசப் போகிறார் என்பதை கேட்கவே ரசிகர்கள் அதிக ஆர்வலுடன் காத்திருந்தனர்.
ஆனால், இந்த முறை திடீரென அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. இந்த தகவல், ஆளுங்கட்சியின் நெருங்கிய நிறுவனமான அந்த தயாரிப்பு தரப்புக்கு தெரியவர, அதுதான் நிகழ்ச்சி ரத்தாக காரணம் என்கின்றனர்.
நடிகர் மீது போடப்பட்ட வழக்கு உள்ளிட்ட ஏகப்பட்ட விவகாரங்கள் உள்ள நிலையில், மாஸ் நடிகர் ஏதாவது தனது மனதுக்கு பட்டதை பட்டென பொதுவெளியில் போட்டு உடைத்து விட்டால் அது ஆளுங்கட்சிக்கு தேவையில்லாத சிக்கலாகி விடும் என்பதால் தான் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யக் கூறியிருக்கிறார்களாம். மேலும், சமீப காலமாக அந்த நடிகரின் ரசிகர்கள் அரசியலில் அசத்தி வரும் நிலையில், அவர்களையும் அவர்களது கட்சியையும் மேலும், பலப்படுத்தும் விதமாக நடிகர் நிச்சயமாக ஒரு சில வார்த்தைகளை பேச வேண்டிய நிலை வரும் அது தேவையில்லாத மைலேஜை கொடுக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சியை ஒட்டுமொத்தமாக நிறுத்த சொல்லி உத்தரவு வரவே நடிகர் காதுக்கும் விஷயங்கள் போக அவரும் ஓகே வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.
ஆனால், அதே சமயம் படத்தின் புரமோஷனுக்காக நடிகர் பேசும் பேட்டியை மட்டும் எடுத்து வெளியிட அந்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், அதில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் நடிகர் பேசும் பதில்களில் எதை போட வேண்டும் எதை நீக்க வேண்டும் என அனைத்தையுமே மேலிடம் தீர்மானிக்கும் என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.