முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆனவர் தானியல் செல்வராஜ்.சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 1938 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் – ஞானம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் தந்தையார் தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணியாகப் பணியாற்றினார். திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தான அரசுபள்ளிகளில் கல்வி பயின்று, நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பயின்றார். பல்வேறு சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதியுள்ள இவருக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் தோல் என்ற படைப்பிற்காக 2012ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதும் வழங்கப்பட்டுள்ளது. 1975-இல் செம்மலர் எழுத்தாளர்கள் 32 பேர்கூடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியபோது அதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் .இவர் பொதுவுடமைக்கொள்கையிலும் பிடிப்புடையவர். இத்தகைய புரட்சி மிக்க எழுத்தாளர் தானியல் செல்வராஜ் பிறந்த தினம் இன்று..!