• Thu. Apr 25th, 2024

ரூல் கர்வ் விதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- ஓ.பன்னீர்செல்வம்

ByA.Tamilselvan

Aug 7, 2022

முல்லைப்பெரியாறு அணை ரூல் கர்வ் விதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணையினால் பயனடைந்து வரும் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்காததற்கு ‘ரூல் கர்வ்’ என்ற விதி தான் காரணம் என்றும், இந்த விதியின் காரணமாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத சூழ்நிலை உள்ளதாகவும். இதன் காரணமாக அங்கு கடும் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த ரூல் கர்வ் விதிக்கு விவசாய சங்கங்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தவரை முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ‘ரூல் கர்வ்’ பிரச்சினை இல்லை என்றே நான் கருதுகிறேன். இது தொடர்பான வழக்கு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் முன்பு வந்தபோது, ‘ரூல் கர்வ்’ தொடர்பான விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்த தாக நான் அறிகிறேன். ஆனால், அதன்மீது முடிவு எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. இந்த ‘ரூல் கர்வ்’ விதிக்கு தமிழ்நாடு அரசு எப்போது ஒப்புதல் கொடுத்தது? இதற்கான அனுமதி யாரால் அளிக்கப்பட்டது? இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்கப்பட்டதா? தமிழ்நாடு அரசினுடைய ஒப்புதல் இல்லாமலேயே மத்திய நீர் வள ஆணையம் இந்த ‘ரூல் கர்வ்’ விதியை வகுத்துள்ளதா? என்பதையெல்லாம் தி.மு.க. அரசு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று விவசாய மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ரூல் கர்வ் அட்டவணையை அனைவரின் பார்வைக்கு வெளியிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அவர்களிடையே இருக்கிறது. எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, ‘ரூல் கர்வ்’ விதி குறித்து நாட்டு மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கவும், ‘ரூல் கர்வ்’ அட்டவணையை அனைவரின் பார்வைக்கு வெளியிடவும், தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய ‘ரூல் கர்வ்’ குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *