நடிகர் விமல் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விமல், கில்லி, குருவி, கிரீடம், காஞ்சிவரம் போன்ற திரைப்படங்களில் துணை நடிகராக நடித்ததை தொடர்ந்து, பாண்டியராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதையடுத்து, சற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தில் அறிவழகன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
களவாணி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு, தேசிங்குராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். சமீபத்தில், விலங்கு என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில், நடிகர் விமல் நடிக்கும் அடுத்த படமான தெய்வ மச்சான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அனிதா சம்பத் விமலின் தங்கையாக நடிக்கிறார். மேலும், இயக்குனர் பாண்டியராஜ் விமலுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களை தவிர ஆடுகளம் நரேன், நடிகை தீபா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கேமில்.ஜே.அலெக்ஸ் ஒளிப்பதிவில் குட்வின்.ஜே.கோடன் இசை அமைக்கிறார். உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் தெய்வ மச்சான் படத்தை மார்ட்டின் நிர்மல் குமார் எழுதி இயக்கியுள்ளார்.