உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் குடும்பத்தினர், அவரின் உடலுக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், விமானத்தில் இறந்தவரின் உடல் நிறைய இடத்தை எடுத்து கொள்வதாக பாஜக எம்எல்ஏ சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்.
இறந்தவரை உடலை வைக்கும் இடத்தில் எட்டு முதல் 10 பேரை ஏற்றி கொள்ளலாம் என ஹூப்ளி – தர்வாட் தொகுதி பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் குறிப்பிட்டுள்ளார். இறந்த மாணவரான நவீனின் உடல் சொந்த ஊரான ஹாவேரிக்கு எடுத்து செல்ல வரப்படுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், “நவீனின் உடலை மீட்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. உக்ரைன் ஒரு போர் மண்டலம். அது அனைவருக்கும் தெரியும். முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முடிந்தால் உடலை மீட்டு தரப்படும்.
உயிருடன் இருப்பவர்களைத் திரும்பக் கொண்டு வருவது மிகவும் சவாலானதாக இருந்தாலும், இறந்தவர்களைக் கொண்டுவருவது இன்னும் கடினமாகிவிட்டது, ஏனெனில் இறந்த உடல் விமானத்தில் அதிக இடத்தைப் எடுத்து கொள்கிறது. இறந்த உடலுக்குப் பதிலாக எட்டு முதல் 10 பேர் வரை ஏற்றி கொள்ளலாம்.
நவீனின் உடலை கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார்” என்றார்.
கார்கிவ் நேஷனல் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்த நவீன் (21), மளிகைக் கடைக்கு வெளியே வரிசையில் நின்றிருந்தபோது, அரசு கட்டிடத்தின் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்டார்.