அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்பரிசு பெற்ற வீரருக்கு அமெரிக்க ஹீஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பில் பண்பாட்டு பாராட்டு விழா!
நாட்டுமாடு பசு கன்றுடன் ஒரு லட்சும் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்பரிசு பெற்ற வீரருக்கு அமெரிக்க ஹீஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக நாட்டுமாடு பசு கன்றுடன் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் இந்தாண்டு தமிழக அரசின் சீரிய வழிகாட்டுதலில் மிகச்சிறப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20மாடுகளை பிடித்து முதல் பரிசு பெற்ற மாடுபிடி வீரராக அபிசித்தர் அறிவிக்கப்பட்டார். அவரை கௌரவிக்கும் விதமாக கீழடி அருங்காட்சியகம் அருகில் அமெரிக்க ஹீஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பில் பண்பாட்டு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் அவ்வமைப்பின் தமிழக ஆலோசகரும் விஜிபி உலகத்தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான விஜி சந்தோஷம் அவர்கள் தலைமையில், தமிழ் ஆய்வுகள் இருக்கை செயலர் பெருமாள் அண்ணாமலை மற்றும் சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளி தலைவர் பால.கார்த்திகேயன் முன்னிலையில் மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு ஹூஸ்டன் தமிழ்இருக்கை புரவலர் கோமதிசரசு சார்பில் நாட்டுமாடு பசுவும் கன்றும் மற்றும் விஜிபி உலகத்தமிழ்ச்சங்கம் சார்பில் 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதுகுறித்து அவ்வமைப்பின் மதுரை சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால.கார்த்திகேயன் கூறியதாவது, உலகம் முழுதும் உள்ள தமிழ் ஆர்வலர்களின் ஆதரவினால் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மகானத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைக்கப்பட்டது. தமிழக அரசு இரண்டு முறை பெருநிதி வழங்கி, இன்றுவரை பேராதரவு நல்கி வருகின்றது. சமீபத்தில் மீண்டும் 1.5கோடி நிதி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்தநேரத்தில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். சமீபத்தில் மாண்புமிகு பத்திரபதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வழிகாட்டுதலில், உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற வீரருக்கு நாட்டுமாடு பரிசளப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ஏழாம் ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் எங்களின் இந்த முயற்சிகளுக்கு பெரும் உதவியாக இருக்கின்ற சுற்றுலா அலுவலர் பாலமுருகன் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும், ஊடகத்துறையினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். மாடுபிடிவீரர்களை அமெரிக்காவிற்கு அழைத்துசென்று கௌரவிக்கும் முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளோம் என்றார்.
விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ்ப்பேராசிரியர் சத்தியமூர்த்தி, பரிதி பதிப்பகம் இளம்பரிதி, கோனார் மெஸ் உரிமையாளர் மாணிக்கம், தொழிலதிபர் பாபு, ஶ்ரீ மீனாட்சி அறக்கட்டளை பொருளாளர் கலைக்குமார், ஶ்ரீ மீனாட்சி அக்ரோ மேலாளர் கண்ணன், SMK அவினாஸ் நண்பர்கள் அருண்குமார், புவனேஸ்வரன் மற்றும் நகர்பி்ரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஹீஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை தமிழகப்பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
