உக்ரைன் –ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக உயர்ந்திருப்பதால், உலக நாடுகள் பதபதக்கின்றன. எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் சப்ளையில் சிக்கல் வருமா, விலை அதிகரிக்குமா என்ற கலக்கத்தில் உள்ளன.
பிரண்ட் கச்சா எண்ணெய் நேற்றுவரை ஒரு பேரல் 99 டாலராக இருந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து 100 டாலருக்கும் அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய் விலை இந்த அளவு உயர்வது இதுதான் முதல்முறையாகும். உக்ரைன் நாட்டின் இரு மாநிலங்களுக்கு சுயாட்சி அளித்து ரஷ்யா அறிவித்ததும், அந்த மாநிலங்களுக்குள் ரஷ்யபடைகள் செல்ல இருப்பதை உலகநாடுகள் கண்டித்துள்ளன.
ரஷ்யாவின் வங்கிகள், நிறுவனஙகள் மீது நிதித்தடையை அமெரிக்கா விதித்துள்ளது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு செல்லும் நிதியை தடுத்துள்ளன, ஜெர்மனி, பிரிட்டனும் நிதித்தடையை ரஷ்யா மீது விதித்துள்ளதால், பிரண்ட் கச்சா எண்ணெய்விலை வரும் நாட்களில் மேலும்அதிகரிக்கும்.
அமெரிக்கா வெஸ்ட் டெக்ஸ்சாஸ் சந்தை கச்சா எண்ணெய் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் பேரல் 96 டாலராக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை வர்தத்கம் முடியும் போது பேரல் 92.35 டாலராகத்தான் இருந்தது.
ரஷ்யா மீது நிதித்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து உற்பத்தியாகும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் சப்ளையில் சிக்கல் ஏற்படலாம். ஆதலால், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் கூட்டமைப்பு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும், உலக நாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும், இல்லாவிட்டால் விலை மேலும் அதிகரிக்கும் அச்சம் இருப்பதாக உலக பல்வேறு சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நைஜிரியா நாட்டின் பெட்ரோலியத்துறை சார்பில் கூறுகையில், “கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபேக் நாடுகள் உற்பத்தியை அதிகப்படுத்த அவசியம் இல்லை. அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டால், ஈரானிலிருந்து வரும் கச்சா எண்ணெய் உலக நாடுகளின் தேவையை சமாளிக்க போதுமானதாக இருக்கும். நாள்தோறும் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கிடைக்கும்போது தேவையை ஈடுகட்ட முடியும்” எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 5 மாநிலத் தேர்தல் நடப்பதால் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துவருவதால் தேர்தலுக்குப்பின் பெரிய விலை உயர்வு காத்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்