• Thu. Apr 25th, 2024

மெரினாவில் ரூ.39 கோடியில் கலைஞர் நினைவிடம்… வெளியானது மாதிரி புகைப்படம்!..

By

Aug 24, 2021

முத்தமிழறிஞர் கலைஞருக்கு நினைவிடம் அமைத்தல் தொடர்பாக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் விதி 110ன் கீழ் அறிவித்துள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த பெருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். உலகெங்கிலும் தமிழர்களுக்கெல்லாம் தமிழினத் தலைவர், இலக்கியத் துறையைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் முத்தமிழறிஞர், கலையுலகத்தினருக்கு என்றும் கலைஞர், தமிழ்நாட்டின் தலைவர்களுக்கெல்லாம் தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி, இந்த அவைக்கு என்றும் நிரந்தர உறுப்பினர், (மேசையைத் தட்டும் ஒலி) எங்களையெல்லாம் உருவாக்கிய தலைவர், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உள்ளத்தில் குடியிருக்கும் மாண்பாளர் என புகழ்ந்துரைத்தார்.

தான் மறைந்தால், ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுதச் சொன்ன மக்கள் தொண்டர் அவர். ‘அண்ணா! நீ இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில், இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா! நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா!” என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உறுதிமொழி எடுத்தவர் அவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சோப லட்சம் தொண்டர்களின் எஃகு இதயத்தை நம்பி, நாம் கொடுத்த வாக்கை நம்முடைய உடன்பிறப்புகள் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு உறுதிமொழி தந்த உடன்பிறப்புகளின் தலைவர் அவர். பேரறிஞர் அண்ணாவுக்குக் கொடுத்த வாக்கை அவரது தம்பிமார்களாகிய நாங்கள் காப்பாற்றினோம்.

இப்படி தன்னைத் தந்து, இந்தத் தாய்த் தமிழ்நாட்டை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கலைஞர் நினைவிடம் சென்னை கடற்கரையில் அமைய உள்ளதை அறிவித்தார். இதற்கான மாதிரி புகைப்படமும் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் கலைஞர் எழுத்துகளை குறிக்கும் வகையில் பேனா வடிவ தூண், திமுக சின்னமான உதயசூரியனை குறிக்கும் வகையில் வளைவுகள் அமைக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *