• Sun. Mar 16th, 2025

சிபிஎம் கட்சியின் எக்ஸ் தள பக்கம் முடக்கம்

Byவிஷா

May 17, 2024

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.
பிரபல சமுக வலைதளமான எக்ஸ் தளத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது கணக்குகளை வைத்துள்ளனர். அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் இந்த பக்கங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் நேற்று மதியம் வரை செயல்பாட்டில் இருந்து வந்தது.
இதனிடையே மர்ம நபர்கள் சிலர் இந்த பக்கத்தை ஹேக் செய்திருப்பதாக தெரிய வருகிறது. பல்வேறு விளம்பரங்களை இந்த பக்கத்தில் அவர்கள் பதிவிட்டுள்ளனர். மேலும் சிபிஎம் தமிழ்நாடு என்ற பெயரை அவர்கள் பெயர் மாற்றம் செய்து முறைகேடு செய்துள்ளனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தங்களது எக்ஸ் தள பக்கத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய நபர்களின் எக்ஸ் தள பக்கங்கள் முடக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு தெலங்கானா ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கப்பட்டு, பின்னர் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.