• Sat. Feb 15th, 2025

இரட்டை ஆணவக் கொலை வழக்கில் கைதானவர் குற்றவாளி… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ByIyamadurai

Jan 23, 2025

சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் இருவரை வெட்டிக் கொலை செய்தவர் குற்றவாளி என்று கோவை எஸ்.சி.,எஸ்.டி., சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி ப்ரியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு கனகராஜ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், 2019-ல் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டதுடன், சீரங்கராயன் ஓடைப் பகுதியில் வாடகை வீட்டில் தனிக்குடும்பம் நடத்தி வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கனகராஜின் அண்ணன் வினோத்குமார், இருவரையும் தேடிச்சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் உயிரிழந்தார். படுகாயமடைந்த வர்ஷினி ப்ரியா உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தை உலுக்கிய இந்த இரட்டை ஆணவக்கொலை தொடர்பான வழக்கு, கோவை எஸ்.சி.,எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த இரட்டை கொலை வழக்கில் கைதான கந்தவேல், அய்யப்பன், சின்னராஜ் ஆகிய மூன்று பேர் விடுவிக்கப்படுவதாகவும், வினோத்குமார் குற்றவாளி என்று
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிக்கான தண்டனை
விவரங்கள் வரும் 29-ம் தேதி வெளியிடப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரட்டை ஆணவப் படுகொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் வினோத்குமாருக்கு அதிகபட்சமாக
மரண தண்டனை வரை வழங்கப்படலாம் என்பதால், தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.